×

கோட்டூர் பெருகவாழ்ந்தானில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் பொது மக்கள் அவதி

மன்னார்குடி, மே. 28: பெருகவாழ்ந்தான் ஊராட்சி மன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் சுமார் 5 இடங்களில் ஆழ்துளை போர்வெல் போடப்பட்டு அவற்றின் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்து போனதாலும், ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாலும் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகள் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் தண்ணீர் உப்பு கலந்த தண்ணீராக மாறிவிட்டது. இந்த தண்ணீரை குடிநீராக பொதுமக்கள்  பயன்படுத்துவதால் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். குறிப்பாக உப்பு கலந்த தண்ணீரை குடித்ததால் அண்மையில் சுமார் 10 க்கும் மேற்பட் டோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெருகவாழ்ந்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்தாண்டு சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள மேல்நிலைநீர் தேக்கத்தொட்டியில் இருக்கும் நீரை சுத்திகரித்து அருகில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அடிக்கடி பழுதாகி விடுவதால் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் அறிவிக்கப்படாத  மின்தடையால்  கடந்த 10 நாட்களாக குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் குடிநீருக்காக  காலி குடங்களுடன் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சுத்திகரிப்பு இயந்திரம் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக பழுது பார்த்து பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தொய்வில்லாமல் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அதன் அருகிலேயே மேலும் ஒரு சுத்திகரிப்பு இயந்திரத்தை கூடுதலாக அமைத்து மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED நீடாமங்கலம், கோட்டூர் அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பம் வரவேற்பு